ஆறு மாதம் கழித்து, மீண்டும் பனிப் பிரதேசம் தொடர் வருவதால் அதன் தொடர்ச்சி விடாமல் இருக்கவும், புதிதாய் படிப்பவர்களுக்கு உபயோகப்படும் வகையிலும் இது ஒரு இணைப்பு வடிவ பாகம். கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் நடந்த உரையாடல் முடிந்ததில் இருந்து தொடங்குகிறேன்.
_________________________________________
கனேடிய First Nations எனப்படும் பழங்குடி மனிதர்களுடன் பேசிய பின்பு என் அறைக்கு வந்தேன்.

தூக்கம், பசி இரண்டும் என்னை வாட்டியது . நான் தங்கி இருந்த அந்த ஹோட்டலின் பெயர் Best Western – Gold Rush Inn..White Horse.

வெளியே பழைய சிவாஜி படத்தில் முதல் காட்சியில் வரும் பங்களா போன்று இருக்கும். உள்ளே, சிவாஜி வெள்ளை சட்டையுடன் குடித்துவிட்டு கடைசி காட்சியில் பாடும் சோக பாடல் போல் பொலிவு இழந்து இருக்கும். இந்த ஊரில் உள்ள ஒரே தங்கும் உருப்படி இடம் இது தான். கோயம்புத்தூரில் சில மார்வாடி பொண்ணுங்க 500 மீட்டார் தொலைவில் ராஜஸ்தான் பளிங்கு போல் இருப்பார்கள். 5 அடி தொலைவில் போய் பார்த்தால் பிஞ்சு போன பேரிச்சம் பழம் போல் இருப்பார்கள்.

வெள்ளை குதிரையில் இருக்கும் இந்த ஹோட்டல் ஒரு வெள்ளை நிற மார்வாடி பொண்ணு. தூரத்தில் ஓகே. அருகே நாட் ஓகே. என் அரை முதல் மாடியில். 50 வருட பழ லிப்ட் ஒரு ராக்கெட் போல கிளம்பும். முதல் மாடி சென்று அடைய இரண்டு நிமிடம் பிடிக்கும். அதுக்கு நடந்து படி ஏறினால் 30 செகண்ட் தான் ஆகும்.

எனக்கு ஒதுக்கப்பட்ட ரூம் ஒரு சிறிய அறை. பத்துக்கு பத்து அடி அளவு. ஒரு கட்டில் மட்டும் நடுவில் இருக்கும். இதில் படுத்து தூங்கியவர்கள் பாதி பேர் இப்போது கல்லறையில் தூங்கி கொண்டு இருப்பார்கள். காரணம் இது 1898 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஹோட்டல். ஏதிரே ஒரு பழைய கண்ணாடி. சுமாரா முகம் காட்டும். குளிருக்கு குல்லாய் போட்ட நம்ம மூஞ்சு செத்த பேய் மூஞ்சு போல தெரியும்.

Best-Western-Gold-Rush-Inn11

ஒரு சாயும் நாற்காலி. அது உட்காராமலேயே சாயும். எதிரே ஒரு பழைய டிவி. நம்ம ஊரில் 1959 ஆண்டு வந்த டயனோர டிவி போல் இருந்தது. ரிமோட் மேல ஏறி நின்னாதான் சேனல் மாறும். சுமார் 15 சேனல் வரும். அதில் 10 சேனலில் வெதர் நெட்வொர்க் சமாச்சாரம். மீதி சேனலில் வெள்ளைக்காரன் சோக கீதம் வாசிப்பான். டிவி ஆன் செய்து பார்த்தால் பத்து நிமிஷத்தில் பரலோகம் போன effect கிடைக்கும்.

ஹோட்டலில் வேலை பார்க்கும் பாதி ஆளுங்க ஜப்பான், சீனா, இந்தோனேசிய, பிலிபினோ ஆளுங்க. ஒரு வித கப்பு நாற்றம் மூக்கை மெதுவாக துளைக்கும். காற்று வர ஜன்னலை திறக்க முடியாது. காரணம் வெள்யே -35 டிகிரி குளிர். டோட்டல் சுடுகாடு பீலிங்.

நம்புங்க, Vancouver மேல போக போக ஒவ்வொரு இன்ச்சும் சோகம்தான். எதையோ இழந்த மனிதர்கள். எதையும் எதிர்பார்த்து வாழாத வாழ்க்கை. மயான அமைதி. தூரத்தில் ஒலிக்கும் கிடார் இசை. எங்கும் வெள்ளை நிறம். அமைதியான சாலை. ஒத்தை தெரு. வெறிச்சோடிய இரவு. பணி மட்டும் கொட்டும். தூரத்தில் ஓநாய்கள் சத்தம்.

DSC00050

இதையும் தாண்டி இந்த ஹோட்டல் அறையை நான் ரசித்தேன். காரணம் நானும் ஒரு கிளி.

கிளி ஜோசியம் பார்க்கும் கிளிக்கு அந்த கூண்டுதான் உலகம். கையில் கூண்டு எடுத்துக்கொண்டு ஜோசியக்காரன் சுற்றும் போது அது உலகம் சுத்துகிறது என்று நினைத்து சந்தோஷபடும். அடைபட்ட வாழ்க்கையில் சிறை கம்பியும் கவிதை பாடும். உலகின் மிக பெரிய காவியங்களும், கவிதைகளும், கண்பிடிப்புகளும் நான்கு சுவருக்குள்தான் அரங்கேறின.

திறந்த வெளியில் கற்பனையும், அடைபட்ட வெளியில் சிந்தனையும் வரும் என்று உளவியலில் படித்ததுண்டு. அதனால்தான் தமிழ் நாட்டில் சினிமா பாட்டு எழுத கொடைக்காணல் ஊட்டி செல்வார்கள். புத்தகம் எழுத, படிக்க அரசியல்வாதிகள் சிறைக்கு செல்வார்கள்.

என் முதல் கட்ட பயணம் நாளை தொடங்க வேண்டும். கிரிகொரி எனக்கு இன்று இரவு போன் செய்ய வேண்டும். போக வேண்டிய எட்டு பேரில் இன்று இரவு வரை வெறும் 4 பேர் தான் வெள்ளை குதிரைக்கு வந்து உள்ளனர். அதிலும் இருவருக்கு காய்ச்சல். இருவர் Luggage மிஸ்ஸிங். நாளை காலையில் மீதி இரண்டு பேர் வருவார்கள். இரண்டு பேர் flight delay வில் காலி.

உடலில் வெப்பம் கவலையுடன் மெதுவாக ஏறுவது எனக்கே தெரிந்தது… இந்த உடம்பு ஆர்டிக் வரை போய் வர தாங்குமா ??? நினைக்கும் போதே பசி எடுத்தது.

 

என் மனைவியும், மகனும் இப்போது இந்தியா செல்லும் வழியில் துபாயில் இருந்தார்கள் என்று Face Book சொன்னது. அங்கு அவர்கள் அரபு நாட்டு பிரியாணியை ஒரு கட்டு கட்ட, நான் இங்கு பாதி வெந்த பிரட் துண்டை வாயால் கட்டி இழுத்தேன். பசி அடங்கவில்லை. கீழே உள்ள ரெஸ்டாரன்ட் தான் போக வேண்டும். வெளியில் சென்று உண்ண உடலில் சக்தி இல்லை. ஜுரம் வருவது போல் இருந்தது. கட்டிலில் சாய்ந்து விட்டேன்.

சற்று நேரம் முன்பு பேசிய First Nations மக்களின் முகம் கண்களில் வந்து வந்து சென்றது.

First Nations

உண்மையில் இன்று நான் சந்தித்த நால்வரும் பழங்குடிகள் என்றாலும் இவர்கள்தான் ஐரோப்பியர்கள் கனடாவிற்கு குடியேறுவதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள். இன்று இவர்கள் முதற் குடிமக்கள், அதாவது கனேடியன் First Nations என்று இவர்களை அழைப்பார்கள்.

உண்மையில், இவர்களின் தாத்தா பாட்டிகள் பல நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் கூடி கூடி வாழ்ந்து பல அடிமைகளை வேறு நாடுகளில் இருந்து கொண்டுவந்து வேட்டை நடத்தி வாழ்ந்த மக்கள். இவர்கள் ஒரு காலத்தில் பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை, சமூகப் பொருளாதார முறைமைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள்.

இனுவிட், மேட்டிசு என்று இருவகையாக இவர்களை பிரிக்கலாம். 2006 சென்சஸ் படி, கனடாவின் மொத்த சனத்தொகையில் 3.8% மக்கள் First nations. இதில் 600 independent groups உள்ளது. நம்ம ஊர் ஜாதி போல் இதிலும் உண்டு. இந்த 12 லட்சம் சனத்தொகையில் 600 வகை மொழி, பண்பாடு, கலை என்று குழுக்கள் உள்ளது. ஏகப்பட்ட ஜாதி சமாசாரம் இது . இதுக்கு நம்மளே பரவாயில்லை என்று எண்ண தோன்றும் அளவு இதில் பிரிவுகள், சண்டைகள் உண்டு.

இவுங்களும் அடிச்சிட்டு சாவாங்க. கண்டபடி கல்யாணம் செய்வாங்க. Inbreeding Depression ரொம்ப ஜாஸ்தி. சொந்தத்தில் கல்யாணம் செய்தால் மூளை மழுங்கிவிடும்.வீரியம் இல்லாத இன வகையாக மாறிவிட்டார்கள். ஆனா இவங்க மேட்டர் உள்ள ஆளுங்க. பார்க்க பரதேசிகள் போல இருந்தாலும் இவர்களின் IQ ஒரு காலத்தில் ரொம்ப ஜாஸ்தி. அதை பற்றி பின்னால் சொல்கிறேன்.

rd_48

கப்பலில் வந்து இறங்கிய ஐரோப்பியர்கள் இந்தக் குளிர் தேசத்தில் எவ்வாறு தப்பி பிழைக்க வேண்டும் என்பதை இவர்களிடம் இருந்து தான் கத்துக்கிட்டாங்க. தொடர்ந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதிக்கமும் இவர்களின் மக்கள் தொகையையும் வாழ்வியலையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்தது. First nations வாழ்ந்த பூமிகளை ஐரோப்பியர்கள் கொஞ்சம் காசு கொடுத்துவிட்டு, மதுபானம் ஊற்றிக்கொடுத்து கஞ்சா போதையில் எழுதி வாங்கி கொண்டார்கள். கொஞ்சம் பழங் குடிகள் இவர்கள் எதிர்த்தார்கள் என்ற போதும், துப்பாக்கி சத்தத்தில் மூத்த குடிகள் ரத்தம் மட்டும் அல்ல கலை, பண்பாடு அனைத்தும் இந்த பனிப் பிரதேசத்தில் கரைந்து போனது ஒரு சோக கதை.

பண்பாட்டு assimilation கொள்கையை வலியுறுத்திய ஐரோப்பிய கனேடிய அரசுகளால் இவர்களில் கணிசமான பகுதியினர் கட்டாயமாக கிறித்தவ சமயத்துக்கு மாற்றப்பட்டார்கள். இவர்கள் கிறித்தவ கல்லூரிகளில் கட்டாயப் கல்வி பெற்றார்கள். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உரு குலைந்து போனார்கள்.

இன்று பேருந்திலும், ஈஸ்ட் வான்கூவரிலும் பல First nations மக்கள் பிச்சை எடுத்து கஞ்சா அடித்து பரதேசி வாழ்க்கை வாழ காரணம் இங்கு வந்த ஐரோப்பியர்கள். வஞ்சனையுடன் இவர்களிடம் இருந்து நிலங்களை அபகரித்து, குடி கும்மாளம் சொல்லி கொடுத்து கத்தி முனையில் கிறிஸ்துவம் போதித்து சிலுவையில் அறைந்த காலம் ஒரு கனேடிய சிவப்பு சரித்திரம்.

 

அந்த கொடுமை இந்த பனிப் பிரதேசத்தில் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகின்றது. வெள்ளைகாரர்கள் நூறு வருடம் முன்பு ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்கள். அதன் பெயர் Aboriginal residential Schools. ( http://eric.ed.gov/?id=ED426821).

ஒரு வெள்ளை வேன் வரும். அதில் ஒரு பாதிரியார், ஒரு சமூக சேவகர் ஒரு போலிஸ் இருப்பார்கள். இந்த வண்டியில் வரும் இந்த மூவரும் ஒவ்வொரு பழங்குடி குடிசைக்கும் சென்று குட்டி குழந்தைகளை கட்டாயமாக பிடித்து இழுத்துக் கொண்டு வருவார்கள்.

residential_school.jpg.size.xxlarge.letterbox residential school_0

பேரன்களையும் பேத்திகளையும் பிடித்து இழுத்து வந்ததை பார்த்த பழங்குடி பெரியவர்கள் மாரடைப்பில் இறந்தார்கள். இப்படி கட்டாயபடுத்தி குழந்தைகளை இழுத்து வர காரணம் பற்றி எழுத எனக்கு ஒரு தொடர் வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் மத மாற்றம் மற்றும் பிரித்தாலும் ஆளுமை.

இப்படி இழுத்து வரப்பட்ட குழந்தைகளின் முடியை வழித்து எடுத்துவிட்டு, பழங்குடி ஆடைகளை தீ வைத்து எரித்தார்கள். இவர்களுக்கு கிருஸ்துவ பெயரை சூட்டி, காட்டாய ஆங்கில பாடம் எடுத்தார்கள். ஓரே நோக்கம் அவர்களை ஐரோப்பியர்களாக மாற்றுவது. இதனால் சுமார் இரண்டு தலைமுறைகள் இவர்களின் பண்பாட்டை விட்டு வெளிய வந்து விட்டார்கள். இவர்களின் மொழி, கலாச்சாரம் அழிந்து போனது.

இது மட்டும் அல்லாது குழந்தைகளை இவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கினார்கள்.அந்த காலத்தில் வெள்ளைகாரன்களுக்கு கற்பழிப்பு ஒரு பொழுது போக்கு.

மொத்தத்தில் இந்த கனேடிய மூத்த குடி கெட்டது.

1984 வரை இந்த கூத்து நடந்தது. 2005 வரையில் இப்படி சீர் அழிந்த 150,000 குழந்தைகளில் வெறும் 80,000 பேர் மட்டுமே உயிரோடு இருந்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்தும் இந்த பறந்து விரிந்த உலகத்தில் இந்த அரசாங்கம் இந்த காலாச்சார சீர் அழிவை, தான் முன் நின்று அரங்கேற்றியதாக சொன்னதில்லை. உலக பழங்குடி அமைப்புக்கள் நெருக்கடி கொடுக்க 2005 ஆண்டு கனேடிய பிரதம மந்திரி முதல் முறையாக தலை வணங்கி அந்து மூத்த குடிகளிடம் மண்ணிப்பு கோரினார்.

https://www.aadnc-aandc.gc.ca/eng/1100100015644/1100100015649

image

கண்ணீர் மல்க நடந்த அந்த பாவ மண்ணிப்பு தினம் – Wednesday June 11, 2008 at 3:00 p.m. (Eastern Daylight Time)
The Prime Minister of Canada, the Right Honourable Stephen Harper, made a Statement of Apology to former students of Indian Residential Schools, on behalf of the Government of Canada.

சுமார் 1.3 பில்லியன் பணம் தலா 10,000 டாலர் ஒவ்வொரு First Nation மாணவனுக்கும் இந்த அரசாங்கம் கொடுத்தது. அவர்கள் வாழும் வரை, வருடம் 3000 டாலர் கொடுப்பதாக ஒத்துக்கொண்டது. இதை தவிர அவர்கள் குழந்தைகளுக்கு ஏனைய உதவிகளை செய்து தருவதாக ஒப்புக்கொண்டது.

இன்று கஞ்சா அடித்து விட்டு மூலையில் படுத்து கிடக்கும் ஒரு பழங்குடி ஒரு காலத்தில் இந்த பூமியை ஆண்டவன். குளிரில் வாழ நமக்கு கத்துக் கொடுத்தவன். ஒரு காலத்தில் இந்த பனிப் பிரதேசத்தை ஆண்ட சக்கரவர்த்தி, இன்று சக்கரை இல்லாத டீயை குடிக்க வதிப்போன உடம்புடன் பிச்சை எடுக்கிறான்.

இன்று Shopper Drug மார்டில் govt கொடுக்கும் subsidy காசில் கஞ்சா அடித்துவிட்டு. McDonald பர்கர் பிச்சை எடுத்து நொண்டி நொண்டி நடந்து செல்லும் போது, அவன் கிழிந்த ஆடை கனேடிய மண்ணில் வெள்ளைக்காரர்கள் விட்டு சென்ற ரத்த கரையை பின்னால் துடைத்துக்கொண்டே செல்கிறது….

First Nations மக்களின் மன காயங்கள் ஆறினாலும், இந்த நூற்றாண்டில் ஒரு பெரிய பனி பிரதேச பழங்குடிகளின் இனத்தை வெள்ளையர்கள் அழித்த வடுக்கள் இந்த மண்ணை விட்டு அகலாது இன்னும் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

சுமார் மாலை நான்கு மணிக்கு கட்டிலில் சாய்ந்த நான் எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை.
உடம்பு கொதித்தது தூக்கத்திலும் தெரிந்தது. போன் அடித்தது …..East Washington Number…..

டாக்டர் மரியதாஸ் பாபு என்ற பெயர் iphone லில் மறைந்து மறைந்து தெரிந்தது.

 

தொடரும்

பனிப் பிரதேசம்

By Sridar Elumalai